திருக்கோஷ்டியூர் கோவில் -Thirukoshtiyur Temple பழமையும் சிறப்புக்களும்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி DSK மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவில்…
- திவ்ய தேசங்கள் 108-ல், 95 ஆவது தலம்.
- இந்திரன் பூஜித்த சௌமிய நாராயணர் விக்ரகம் உற்சவராக இருக்கக்கூடிய ஆலயம்.
- உலகின் உயிர்கள் அனைத்தும் பயன்பெற வேண்டி நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய இடம்.
- நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்மக் கோலத்தை தேவர்களுக்கு பெருமாள் காட்டி அருளிய இடம்.
- அஷ்டாங்க விமான அமைப்பை கொண்டிருக்கக் கூடிய வெகு சில கோவில்களில் ஒன்று.
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டு, 1500 ஆண்டுகால பழமையுடன் யுகம் கடந்த வரலாற்றை கொண்டு விளங்குகிறது திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்.
திருக்கோஷ்டியுர் கோவில் வரலாறு – Thirukoshtiyur Temple History
பிரம்ம தேவரிடம் வரம் பெற்ற இரணியகசிபு தேவர்களை கடுமையாக துன்புறுத்தி வந்த நிலையில், அவனிடமிருந்து தங்களை காத்தருளுமாறு தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
தேவர்களின் கோரிக்கைக்கு மனம் இறங்கிய மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்வது குறித்து ஆலோசிப்பதற்காக தேவர்களை அழைத்தார்.
ஆனால் இந்த விஷயத்தை இரணியன் அறிந்தால் மேலும் அவன் ஆத்திரமடைந்து அதிக கொடுமைகளை நிகழ்த்த கூடும் என்று அஞ்சிய தேவர்கள், இரணியனின் தொந்தரவு இல்லாத ஒரு இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டார்கள்.
watch video: திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் வரலாறும் சிறப்புக்களும்
அதனை ஏற்றுக் கொண்ட மகாவிஷ்ணு, இத்தளத்தில் விஷ்ணு தரிசனம் வேண்டி தவம் செய்து வரும் கதம்ப மகரிஷி,
தனது தவத்திற்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என்று வரம் பெற்று இருக்கும் காரணத்தால், இங்கு புகுந்து இரணியனால் எதுவும் செய்ய முடியாது என்பதை மனதில் கொண்டு ஆலோசனைக்கான சிறந்த இடமாக திருக்கோஷ்டியூரை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி மும்மூர்த்திகளும் ஆலோசித்து இரணியனை நரசிம்ம அவதாரமெடுத்து வதம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்யப் போவதாக மகாவிஷ்ணு தேவர்களிடம் தெரிவித்தார்.
நரசிம்ம அவதாரம் என்ற உடனே அந்த நரசிம்ம அவதாரத்தை காண ஆவல் கொண்ட தேவர்களும் கதம்ப மகரிஷியும், தங்களுக்கு அந்த அவதார தோற்றத்தை காட்டி அருளுமாறு விஷ்ணு பகவானிடம் கோரிக்கை வைத்தார்கள்.
அவர்களின் கோரிக்கைக்கு மனமிறங்கிய விஷ்ணு பகவான் தான் நரசிம்ம அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவே இந்த தலத்தில் தேவர்களுக்கு நரசிம்மக் கோலத்தை காட்டி அருளினார்.
அதன் பின்னர் அவர்களுக்கு நின்ற கோலம், நடந்து கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என நான்கு கோலங்களில் காட்சி தந்து எழுந்தருளி உள்ளார். ஆண்டாள் திருப்பாதம் பெற்ற மூன்று தலங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர் என்று கூறப்படுகிறது.
பெரியாழ்வாரிடம் கண்ணன் பிறந்த இடமான மதுராபுரி எங்கே உள்ளது, கண்ணன் வளர்ந்த இடமான கோகுலம் எங்கே உள்ளது, கண்ணன் ஓடி விளையாடி மகிழ்ந்த இடமான பிருந்தாவனம் எங்கே உள்ளது என்றெல்லாம் ஆண்டாள் கேள்விகளை கேட்டபோது,
கண்ணன் பிறந்து வளர்ந்த இடம் என திருக்கோஷ்டியூரையும், கண்ணன் ஓடி விளையாடி மகிழ்ந்த இடம் என கோவிலும் காட்டி சொன்ன சிறப்பிற்குரியதாகும் இந்த தலம்.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் – Thirukoshtiyur Temple அமைப்பு
சௌமிய நாராயண பெருமாள் ஆலயத்தில் உள்ள அஷ்டாங்க விமானம் ஒரு சில கோவில்களில் மட்டுமே உள்ள சிறப்பிற்குரியதாகும். மூன்று தளங்களைக் கொண்டுள்ள விமானத்தின் வடக்கு பக்கத்தில் நரசிம்மர் அருகே ராகு கேதுவும் உள்ளார்கள்.
பிரகாரத்தில் நரசிம்மர் இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். திருக்கோஷ்டியூர் கோயிலின் முகப்பில் சுயம்புலிங்கம் அமைந்திருப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு தனிப்பெரும் சிறப்பு. தல மூர்த்தியான சௌமிய நாராயணருடன் ஸ்ரீதேவியம் பூதேவியும் உள்ளார்கள். திருமா மகள் என்ற பெயரில் தாயார் தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
இந்த தளத்தில் கிருஷ்ணர் சந்தான கிருஷ்ணராக வீற்றிருக்கிறார். பிரார்த்தனை கண்ணன் என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உள்ளது. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தனித்தன்மைகள் நிறைந்த திருக்கோஷ்டியூர் கோவில்
கோவில் விமானமானது ஓம் நமோ நாராயணா என்ற நாராயண மந்திரத்தை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களாக அமைந்துள்ளது. குருவின் கட்டளையையும் மீறி இந்த விமானத்தில் ஏறி நின்று தான் ராமானுஜர் மக்களை அழைத்து ஓம் நமோ நாராயணா என்ற நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரை திருக்கோஷ்டியூரில் தங்குயிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்து வந்த சௌமிய நாராயணர் விக்கிரகத்தை கதம்ப மகரிஷிக்கு கொடுத்துள்ளார்.
அந்த மூர்த்தி தான் இன்றும் திருக்கோஷ்டியூர் கோவிலில் உற்சவரராக உள்ளார் என்று கூறப்படுகிறது.
கோவில் பிரகாரத்தில் மகாமகம் கிணறு ஒன்று உள்ளது. புருரூப சக்கரவர்த்தி இங்கு திருப்பணி செய்து கொண்டிருந்தபோது மகாமகம் விழா வந்துள்ளது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பியுள்ளார் புரு ரூபர்.
அப்போது இத்தளத்தின் ஈசானிய திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க அதில் பெருமாள் காட்சி தந்துள்ளார். அது முதல் அந்தக் கிணறானது மகாமகம் கிணறு என்று அழைக்கப்படுகிறது. இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் விழாவின்போது சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்வார்.
இந்த தலத்திற்கு திருக்கோஷ்டியூர் – Thirukoshtiyur என்று பெயர் வரக் காரணம்
திருக்கு என்றால் துன்பம் என்பது பொருளாகும். தேவர்களின் துன்பமாகிய “திருக்கு” அதனை ஓட்டிய இடம் என்பதால் திருக்கோட்டியூர் என்று பெயர் பெற்று நாளடைவில் அது திருக்கோஷ்டியூர் ஆனதாக ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மும்மூர்த்திகளும் தேவர்களும் கோஷ்டியாக இரணியனை எவ்வாறு வதம் செய்வது என்பது குறித்து ஆலோசித்த இடம் என்பதால் திருக்கோஷ்டியூர் என்று பெயர் பெற்றதாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
இதையும் பாருங்கள்: கந்த சஷ்டி கவசம் படிக்கும் முறை
முக்கிய திருவிழாக்களும் சிறப்புக்களும்
திருக்கோஷ்டியூர் தேர் திருவிழா
சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தன்னரசு கள்ளர் நாடுகளான பட்டமங்கலம் நாடு, மல்லாக்கோட்டை நாடு உட்பட நாட்டார்களும் பொதுமக்களும் வடமிழுக்க லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை தேர் திருவிழா.
மேலும் இங்கு வைகுண்ட ஏகாதசி நவராத்திரி விழா மாசி மாத தெப்ப திருவிழா போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
Watch Video: திருக்கோஷ்டியூர் தேர்த்திருவிழா
திருக்கோஷ்டியூர் மாசி மகம் தெப்ப திருவிழா – Thirukoshtiyur masi magam
மாசி மக தெப்ப திருவிழாவின்போது பல்வேறு வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய மக்கள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்துகிறார்கள்.
திருக்கோஷ்டியூர் கோவிலில் விளக்கு பிரார்த்தனை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இங்கு பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமிக்கு ஏற்றிவிட்டு, அதற்கு பதிலாக அங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஏற்றி வைத்துள்ள ஒரு விளக்கில் காசு வைத்து, அந்த விளக்கை ஒரு சிறு பெட்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்துச்சென்று வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.
அப்படி வைக்கப்பட்ட அந்த விளக்கில் பெருமாளும் லட்சுமியும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
அவ்வாறு செய்வதால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி மாத தெப்ப திருவிழாவின்போது, அந்த விளக்குடன் மேலும் விளக்குகளை வாங்கி தீர்த்தக்கரையில் ஏற்றி வழிபடுகிறார்கள்.
புதிதாக வேண்டுதல் வைத்திருப்பவர்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஏற்றிய விளக்குகளை எடுத்துச் செல்வார்கள்.
தேப்பத்திருவிழாவில் விளக்கேற்றி வைக்கப்படும் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களே சாட்சி.
11 நாட்கள் நடைபெறும் இந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட வந்து கலந்து கொள்வார்கள்.
திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பிற்குரிய தலமாக போற்றப்படும் இந்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவில்.
Watch Video: திருக்கோஷ்டியூர் விளக்கு எடுக்கும் முறை
முக்கிய நகரங்களில் இருந்து போக்குவரத்து வசதிகள்
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் காரைக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பேருந்து போக்குவரத்து உள்ளது.
- மதுரையில் இருந்து 69 கிலோமீட்டர் தொலைவிலும்,
- சிவகங்கையில் இருந்து 29 கிலோமீட்ட தொலைவிலும்,
- காரைக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும்,
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.