போர் விமானம் சூப்பர் சோனிக் ஏவுகணை கூட்டணி என்பது, ஒரு சூப்பர் சோனிக் ஏவுகணையை, போர் விமானத்தில் இருந்து ஏவும் திறனைக் குறிப்பதாகும். அத்தகைய திறன் உலகில் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே உள்ளது.
சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் வேறுபட்ட ஏவுதளங்களில் இருந்து ஏவ முடிந்தவை என்றாலும், போர் விமானங்களில் இருந்து ஏவுதல் சற்று சிக்கலான விசயமாக உள்ளது. அதனால் க்ரூஸ் ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து ஏவும் திறனை சில நாடுகள் மட்டுமே கொண்டுள்ளன.
இந்தியாவின் சுகோய் 30 எம்.கே.ஐ விமானத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை ஏவும் திறனுடன் அந்தப் பட்டியலில் நமது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
போர் விமானம் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒருங்கிணைத்தல்
இந்திய விமானப்படையின் முதுகெலும்பு சிறப்பிக்கப்படும் போர் விமானமாகும் ரஷ்யத் தயாரிப்பு விமானமான சுகோய் – 30 MKI. அது மட்டுமல்ல உலகின் மிகச்சிறந்த போர் விமானங்களில் ஒன்றாகவும், அதி சக்தி வாய்ந்த விமானமாகவும் உள்ளது இந்த விமானம்.
அதுபோலவே இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணை உலகின் அதிவேக, மற்றும் அதி சக்திவாய்ந்த சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும்.
உலகின் அதி சக்திவாய்ந்த போர் விமானம், உலகின் அதி வேக சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை கூட்டணி இந்திய விமானப்படைக்கு மிகப்பெரும் பலமாக அமையும் என்று தீர்மானித்து, அவற்றை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சுகோய் 30 MKI உடன், அதிக எடையுடைய, அதிக வேகமுள்ள சுகோய் பிரம்மோஸை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமாக இருந்தது.
2013ல் ரஷ்யா ரூ.1300 கோடி ரூபாய் செல்வில் பிரம்மோஸை சுகோய் 30 எம்.கே.ஐ உடன் ஒருங்கிணைக்க முன்வந்தது. அதாவது பிரம்மோஸ் ஏவுகணையை சுகோய் விமானத்துடன் ஒருங்கிணைப்பதற்கு அவ்வளவு தொகை கேட்டுள்ளது ரஷ்யா.
1300 கோடி என்பது மிகப்பெரிய தொகை என்று கருதியதால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், நாட்டின் நலன் கருதி 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒருங்கிணைப்பு செய்ய முடிவு செய்தது.
நான்கு வருடங்கள் நீண்ட கடின முயற்சிகளுக்குப் பிறகு, செப்டம்பர் 22, 2017 அன்று, சுகோய் 30 MKI விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
அந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி வரலாறு படைத்தது. அதன் மூலம் போர் விமானம் சூப்பர் சோனிக் ஏவுகணை என்ற வலுவான கூட்டணி ஆயுத அமைப்பைக் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.