அவ்வப்போது ஹைப்பர் சோனிக் ஏவுகணை பற்றிய செய்திகள் கேட்பதுண்டு.
ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது சீனா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது என்று அவ்வப்போது செய்திகளில் வெளிவந்து, அது பெருமலவிள் பேசப்படுவதுண்டு.
சமீபத்தில் வடகொரியா கூட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது என்று செய்திகளில் கேட்டிருப்பீர்கள்.
அதுமட்டுமல்ல பொதுவாகவே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பற்றி கேட்கும்போது, அவை மிகவும் ஆபத்தானவை என்று சொல்லப் படுவதையும், அதனாலேயே ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகள் மிகுந்த கவணத்தைப் பெறுகின்றன என்பதையும் காண முடிகிறது.
என்னதான் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அவ்வளவு ஆபத்தானதாக, மற்ற ஏவுகணைகளைவிட அதிபயங்கரமான ஏவுகணையாக வேறுபடுத்துகிறது என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் கூறும் ஒரு பதில் இதுதான்.
அதாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேக் – 5 அதாவது ஒலியைவிட ஐந்துமடங்கோ அல்லது அதைவிட வேகமாகவோ பயணிக்கக் கூடியதாகும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்பதாக உள்ளது பதில்.
ஆனால் நாம் இங்கு கவணிக்க வேண்டிய ஒரு முக்கியமான விசயம் உள்ளது. அதாவது நமது இந்தியாவின் அக்னி – 5 மிசைலின் ரீ என்ட்ரி வெலோசிடி (Re-entry Velocity) மேக் 24 ஆகும். ஆனால் அக்னி -5 ஒரு ஹைப்பர் சோனிக் ஏவுகணை அல்ல.
அப்படியானால் என்ன இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை. எதனடிப்படையில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று தீர்மானிக்கப் படுகிறது? ஏதனால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மிகவும் வலிமையானவையாக, மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன?
இதுபோன்ற விசயங்களைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஏவுகணை மற்றும் அதன் நோக்கமும்
ஹைப்பர்சோனிக் மிசைல்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் முதலில் மிசைல்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்மில் பலரும் ஏவுகணை என்றவுடன் அதுவே ஒரு ஆயுதம் என்று எண்ணியுள்ளோம். அதாவது நாம் ஒரு எதிரி நாட்டை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவிவிட்டால் அது அங்கு சென்று தாக்குதல் நடத்துகிறது என்று கருதியுள்ளோம்.
ஆனால் மிசைல் (Missile) என்பது ஒரு வாகனம் மட்டுமேயாகும்.
அதாவது நம்மிடம் உள்ள ஒரு வெடிபொருளோ, அணு ஆயுதமோ என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு ஆயுதத்தை எங்கு வெடிக்கச் செய்ய வேண்டுமோ அங்கு கொண்டு சேர்க்கும் ஒரு வாகனம் மட்டுமேயாகும் இந்த ஏவுகணை.
பழைய கால போர்முறைகளை கவனித்தால் ராணுவ வீரர்கள் நேரடியாக அதுபோன்ற ஆயுதங்களை கொண்டு சேர்த்திருந்தார்கள். அதன் பின்னர் ஜப்பானில் நடந்த அணு ஆயுத தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, ஒரு விமானத்தில் அணு குண்டுகள் எடுத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அப்படியெல்லாம் செய்யும்போது அதில் ஏராளமான சிக்கல்களும் ஆபத்துக்களும் உள்ளன. காரணம், அந்த முறைகளில் எல்லாம் எங்கு தாக்குதல் நடத்தப்பட வேண்டுமோ, அங்கு மனிதர்களோ, அல்லது விமானங்களோ சென்று தாக்குதல் நடத்தவேண்டும்.
அப்படிப்பட்ட குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப் படுபவைதான் ஏவுகணைகள். ஏவுகணைகள் ஆகும்போது இருந்த இடத்திலிருந்து ஏவி விட்டால் போதும் அது தாக்குதல் நடத்த வேண்டிய இடத்திற்கு ஆயுதத்தைக் கொண்டு சேர்த்து விடும்.
அப்படி ஒரு ஆயுதத்தைக் கொண்டு சேர்க்கும் வாகனமான ஏவுகணையில் பொருத்தி அனுப்பப்படும் வெடிபொருளைத்தான், ஒரு ஏவுகணையினுடைய வார்ஹெட் (Warhead) , அல்லது பேலோட் (Payload) என்று கூறுகிறோம். தமிழில் போர் முனை என்று சொல்லப்படும்.
இந்த பே-லோட், அல்லது போர் முனைகளை நாம் எங்கு தாக்குதல் நடத்த வேண்டுமோ, அங்கு கொண்டு சேர்ப்பதுதான் ஏவுகணையின் வேலை.
எந்த நிலையில் இருந்து ஏவுகணை ஏவப்படுகிறது, எந்த நிலையில் உள்ள இலக்கை அந்த ஏவுகணை தாக்குகிறது என்பனவற்றை அடிப்படையாக கொண்டு, ஏவுகணைகள் பல வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
உதாரணத்திற்கு Surface to Air, Air to Air, என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதாவது பூமியில் இருந்து பூமியில் உள்ள ஒரு இலக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணை Surface to Surface அல்லது நிலத்தில் இருந்து நிலத்திற்கு ஏவப்படும் ஏவுகணை என்றும்,
நிலத்தில் இருந்து விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ, டிரோன்களையோ என்று வானில் உள்ள ஏதேனும் இலக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணை, சர்ஃபஸ் டு ஏர் அல்லது நிலத்தில் இருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை என்றும், கூறப்படுகிறது.
சமீபத்தில் நாம் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ளோம். அது நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தும் அமைப்பு என்பதால் அது சர்ஃபஸ் டு ஏர் மிசைல் ஆகும்.
அதேபோல விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்தை தாக்குவதற்காக ஏவப்படும் ஏவுகணை ஏர் டு ஏர் மிசைல் அதாவது வானில் இருந்து வானில் உள்ள இலக்கிற்கு ஏவப்படும் ஏவுகணையாகும்.
அடுத்து ஏவுகணைகள் எப்படிப்பட்ட இலக்கைத் தாக்குவதற்காக பயன்படுத்தப் படுகின்றன என்பதை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன.
உதாரணத்திற்கு பேட்டில் டேங்குகளை (Battle Tank) தாக்கி அழிப்பதற்காக என்றே பயன்படுத்தப்படும் மிசைல்கள் ஆண்டி டாங்க் (Anti-Tank) மிசைல்கள். அதேபோல சேட்டிலைட்டுகளை தாக்குவதற்காக பயன்படுத்தப்படும் மிசைல்கள் ஆண்டி சேட்டிலைட் மிசைல்கள்.
இப்படி அவற்றின் தயாரிப்பு நோக்கங்களை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் இங்கு முக்கியமாக நாம் அறிந்திருக்கவேண்டிய வகைப்படுத்தல் என்பது, இந்த ஏவுகணைகள் பயணிக்கும் விதங்களைப் பொறுத்து வகைப்படுத்தப் படுவதைத்தான்.
அப்படி வகைப்படுத்தப் பட்டவைதான் பாலஸ்டிக் மிசைல்கள், மற்றும் க்ர்யூஸ் மிசைல்கள்.
இவை இரண்டு வகை ஏவுகணைகளைப் பற்றி தெளிவாக புரிந்துகொண்டால் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பாலஸ்டிக் ஏவுகணை (Ballistic Missile) – ஹைப்பர் சோனிக் ஏவுகணை
பாலஸ்டிக் மிசைல் என்பது அல்லது ஒரு பராபோலிக் பாத் அதாவது தமிழில் பரவளையப் பாதையில் பயணிக்கும் மிசைல்களை பாலஸ்டிக் மிசைல்கள் என்று கூறுகிறோம்.
நாம் ஒலிம்பிக் போட்டிகள் உட்படவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் ஜாவெல் த்ரோ அதாவது ஈட்டி எறிதல் போட்டியைக் கண்டிருப்போம். ஈட்டி எறியும் போட்டியில் அந்த ஈட்டியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வேகமாக வீசப்படுகிறது.
அப்படி வீசப்படும் ஈட்டியானது அதனை எறிபவர் கொடுக்கக் கூடிய சக்திக்கேற்ப ஒரு குறிப்பிட்ட உயரம் வரை செல்லும். அதன் உச்சகட்ட உயரத்தை அடைந்தவுடன், பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக் கீழ்நோக்கி பயணிக்கிறது.
அப்படி ஏவப்படும் இடத்தில் இருந்து அது தரையை தொடும் வரை பிந்தொடரும் அந்த பாதைதான் பரவளையப் பாதை (Parabolic path) என்று கூறப்படுகிறது. அதே முறையில்தான் பாலஸ்டிக் ஏவுகணைகளும் செயல்படுகின்றன.
அதாவது பூமியில் இருந்து ஒரு ராக்கடை ஏவுவதுபோலவேதான் இந்த ஏவுகணைகளும் ராக்கட் என்ஜிங்களின் மூலமாக ஏவப்படுகிறது. அப்படி ஏவப்படும் ஏவுகணைகள் விண்வெளியில் அதிக உயரத்திற்கு பயணிக்கும். 2000 கிலோமீட்டர் உயரம் வரை பாலஸ்டிக் ஏவுகணைகள் செல்லும் என்று கூறப்படுகிறது.
அப்படி அந்த ஏவுகணையில் சக்திக்கேற்ப உயரத்தை அடையும்போது, அதன் எரிபொருள் முழுவதும் எரிக்கப்பட்டு விடவோ, ராக்கட்டின் சக்தி தீரவோ செய்யும். அப்போது அந்த ராக்கட்டில் இருந்து நாம் முன்பு கூறிய வார்ஹெட் அல்லது போர்முனை விடுபடும். வார்ஹெட் என்பதுதான் வெடிபொருள் என்று முன்பே பார்த்தோம்.
அப்படி விடுபட்ட அந்த போர் முனை (Warhead), Gravitational Force அல்லது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக தாழ்நோக்கி பயணிக்கும்.
மிக அதிக உயரத்தில் இருந்து புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மட்டும் தாழ்நோக்கி பயணிக்கும் அந்த வார்ஹெட்டின் ரீ என்ட்ரி ஸ்பீட், மிக மிக அதிகமாக இருக்கும்.
அதாவது அட்மோஸ்பியருக்குள் திரும்பி பயணிப்பதைத்தான் ரீ என்ட்ரி என்றும் அப்போது அது பயணிக்கும் வேகமே “Re-entry speed” என்றும் குறிப்பிடப் படுகிறது.
அப்படி ரீ என்ட்ரி ஆகும்போது அதன் வேகம், நாம் முன்பு கூறியதுபோல, மேக் 25 முதல் மேக் 30 வரை உண்டாகும்.
அப்படியாகும்போது மணிக்கு 25000 கிலோமீட்டர் முதல் 30000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். பாலஸ்டிக் மிசைல்களின் சிறப்பம்சம் இதுதான். அவ்வளவு வேகத்தில் இலக்கில் சென்று மோதுவதால், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும்.
அதுமட்டுமல்ல அதிக வேகத்தில் பயணிக்கும் இந்த வகை ஏவுகணைகளை முங்கூட்டியே கண்டறிய தவறினால், அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியாது. எனவே தாக்குதல் திறன் அதிகம், அதோடு ரெஸ்பான்ஸ் டைம் மிகக் குறைவு போன்றவைதான் பாலஸ்டிக் மிசைல்களின் மிகவும் முக்கியமான தனிச்சிறப்புகள்.
பாலஸ்டிக் ஏவுகணைகளில் அதிக அளவிலான ஆயுதங்களை அனுப்ப முடியும் என்பது அவற்றின் இரண்டாவது சிறப்பம்சமாகும். ராக்கட் எஞ்ஜின்கள் பயன்படுத்தப்படுவதால் பெருமளவிலான ஆயுதங்களை இவற்றில் பொருத்தி அனுப்ப முடியும்.
உதாரணத்திற்கு இந்தியாவின் அக்னி -5 ஏவுகணையின் பேலோட் கெப்பாசிட்டி (Payload Capacity) 1100 கிலோகிராமிற்கும் அதிகமாகும்.
அதாவது 1 டன் எடைக்கும் அதிகமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய திறனுள்ளதாகும் அக்னி – 5 ஏவுகணை. உலகிலுள்ள பாலஸ்டிக் மிசைல்கள் அனைத்திற்கும் இதுபோல அதிகளவிலான பேலோட் கெப்பாசிட்டி உண்டாகும்.
அதிக அளவிலான வெடிபொருட்களை கொண்டு சென்று தாக்கக் கூடிய திறன் உள்ளதால் இவை அதிக அபாயகரமான, அதாவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதங்களாக பார்க்கப் படுகின்றன.
பாலஸ்டிக் மிசைல்களின் அடுத்த சிறப்பம்சம் இவற்றின் தாக்குதல் வரம்பு (Range) ஆகும். பாலஸ்டிக் மிசைல்களால் மிக அதிக தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும். மிக அதிக தொலைவில் சென்று தாக்கும் திறனுள்ள ஏவுகணைகள் கண்டம் தாவு பாலஸ்டிக் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles) என்று கூறப்படுகின்றன.
அதாவது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறனுள்ள ஏவுகணைகள் இன்டெர் காண்டினென்டல் பாலஸ்டிக் மிசைல்கள் ஆகும். ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்தில் சென்று தாக்குதல் நடத்த வேண்டுமானால அதிக தொலைவு பயணிக்க வேண்டும். அதனைச் செய்பவைதான் இந்த ICBM என்னும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள்.
நாம் முன்பு கூறிய நமது அக்னி -5 ஏவுகணை 5500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுள்ளதாகும்.
டி.எஃப் – 41 என்ற தமது ஏவுகணை கிட்டத்தட்ட 15000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறனுள்ளதென்று சீனா கூறுகிறது. எனவே அவ்வளவு தொலைவில் உள்ள ஒரு இலக்கை குறிவைத்து தாக்க முடியும் என்பது பாலஸ்டிக் மிசைல்களின் அடுத்த சிறப்பம்சமாகும்.
பாலஸ்டிக் ஏவுகணையின் குறைபாடுகள்
இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ள பாலஸ்டிக் மிசைல்கலில் சில குறைபாடுகளும் உள்ளன. பாலஸ்டில் மிசைல்களின் குறைபாடுகளில் மிக முக்கியமானது அவற்றின் பயணப் பாதைதான்.
அதிக உயரத்திற்கு இந்த ஏவுகணைகள் பயணிப்பதால் ரெடார்களால் மிக எளிதாக இவற்றை கண்டுபிடிக்க முடியும். இங்கு பார்த்தால் தெரியும், ஏவுகணை உள்ளது பூமியின் ஒரு புறத்திலும், இலக்கு மற்றொரு புறத்திலுமாக அமைந்துள்ளது. ஆனால் ஏவுகணை அதிக உயரத்திற்கு செல்வதால் ரெடார்களால் அதனைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்கப் படும்பட்சத்தில் அவற்றை வரும் வழியிலேயே வான்பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் தகர்த்திடமுடியும்.
மற்றொரு குறைபாடு பாலஸ்டிக் மிசைல்களை வழிமாற்ற முடியாது என்பதாகும்.
அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பாலஸ்டிக் ஏவுகணையை ஏவிவிட்டால், அதன்பின்னர் அது பயணிக்கும் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே அந்த ஏவுகணை எந்த இலக்கை நோக்கி செல்கிறதோ அந்த நாட்டின் ரெடார்களால கண்டுபிடிக்கப் பட்டால், அதன் இலக்கு என்ன என்பதை துல்லியமாக கண்டுபிடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இவை இரண்டும் பாலஸ்டிக் ஏவுகணைகளின் மிக முக்கியமான குறைபாடுகள் அல்லது டிஸட்வான்டேஜஸ் ஆகும். பாலஸ்டிக் மிசைல்கள் பற்றி ஓரளவுக்கு புரியும் விதத்தில் பார்த்துவிட்டதாக கருகிறோம்.
சீர்வேக ஏவுகணைகள் அல்லது Cruise Missiles.
குரூஸ் மிசைல்கள் பொதுவாக பூமியின் மேற்பரப்பிற்கு இணையான பாதையில் மிகத் தாழ்வாக பறக்கக் கூடியவையாகும். இவற்றின் மற்றொரு சிறப்பம்சம் இவை பயணிக்கும் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதாகும்.
குரூஸ் மிசைல்கள் விமானங்களில் பயன்படுத்தப் படுவதுபோன்ற ஜெட் எஞ்ஜிங்களைப் பயன்படுத்தி பயணிக்கின்றன. ஜெட் எஞ்சின் இயங்குவதற்கு ஆக்ஸிஜனின் தேவை உள்ளது, அதனால் இவை வளிமண்டலத்திற்கு வெளியில் செல்வதில்லை.
அதேநேரம் இவை மிகத் தாழ்வாக, 100 மீட்டர் உயரத்தில் வரை பறக்கக் கூடியவையாகும். அப்படி மிகத் தாழ்வாக பறப்பதனால இந்த வகை ஏவுகணைகளை ரெடார்களால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
இந்த படத்தை பார்த்தால் புரியும்.
இது பூமியின் மேற்பரப்பிற்கு மிக அருகில் தாழ்வாக பறப்பதனால், இலக்கிற்கு மிக அருகில் செல்லும்போது மட்டுமே இவற்றை ரெடார்களால் கண்டுபிடிக்க முடியும்.
அப்படி மிகவும் நெருங்கிவிட்ட நிலையில் கண்டுபிடிக்கப் படும்போது அதற்கு எதிர்வினையாற்றக் கிடைக்கும் நேரம் மிக மிகக் குறைவாகும். இது குரூஸ் மிசைல்களின் மிக முக்கியமான மற்றும் முதலாவது சிறப்பம்சம்.
மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் இவை பயணிக்கும் பாதையை மாற்றிக் கொண்டிருக்க முடியும்.
க்ரூஸ் மிசைல்களை கவனித்தால், எல்லா ஏவுகணைகளிலுமே ஒரு சிறிய இறக்கை போன்ற அமைப்பு உண்டாகும். அந்த இறக்கை அமைப்புதான் இதன் பாதையில் மாற்றப்களை ஏற்படுத்த உதவிகரமாக உள்ளது. தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தோ, செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு அமைப்புகளின் மூலமாகவோ என்று வேறுபட்ட அமைப்புகளின் மூலமாக இவை கட்டுப்படுத்தப் படுகின்றன.
எனவே இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளால் கண்டுபிடிக்கப் பட்டாலும் கூட, அதன் இலக்கு எதுவென்று உறுதிப்படுத்த முடியாது. காரணம் எந்த நேரத்திலும் அதன் பாதையை மாற்றிக் கொண்டிருக்கும். குரூஸ் ஏவுகணைகளின் மிகப்பெரும் சிறப்புகளில் இதுவும் முக்கியமானதாகும்.
இதையும் பாருங்கள்: இந்தியாவின் தௌலத் பேக் ஓல்டி – சீனாவிற்கு அச்சுறுத்தலாவது எப்படி?
க்ரூஸ் ஏவுகணைகளின் குறைபாடுகள்
அதே நேரம் இந்த க்ரூஸ் மிசைல்களிலும் சில குறைபாடுகள் உள்ளன.
இந்த சீர்வேக ஏவுகணைகளில் ஜெட் என்ஜின் பயன்படுத்தப் படுவதால் இவற்றில் நிரப்ப முடிந்த எரிபொருள் மிகக் குறைந்த அளவேயாகும். அதனால் இவற்றின் ரேஞ்ஜ் அதாவது தாக்குதல் தூரம் மிக மிகக் குறைவாகும். அதேபோல இந்த சீர்வேக ஏவுகணைகள் கொண்டு செல்லும் ஆயுதங்களின் அளவும் மிகக் குறைவாகும்.
பாலஸ்டிக் ஏவுகணைகளால் ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும் என்றால், க்ரூஸ் ஏவுகணைகளில் 200 அல்லது 300 கிலோகிராம் எடையுள்ள ஆயுதங்களை மட்டுமே கையாள முடியும்.
அதுமட்டுமல்ல இவற்றின் மற்றொரு முக்கியமான குறைபாடு என்பது இவற்றி வேகம்தான். பெரும்பாலான க்ரூஸ் ஏவுகணைகளும் சப்சோனிக் ஸ்பீடில் அதாவது ஒலியைவிட குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடியவையாக உள்ளன.
அதே நேரம் இந்தியாவின் பிரம்மோஸ் (Brahmos) சூப்பர்சோனிக் அதாவது ஒலியைவிட வேகத்தில் பயணிக்கும் க்ரூஸ் மிசைல் ஆகும். மேக் 3 வேகத்தில் பயணிக்கும் ஏவுகணையாக உள்ளதால்தான் அது உலகிலேயே மிக வேகமான க்ரூஸ் மிசைல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இப்போது க்ரூஸ் ஏவுகணைகளை பற்றியும் ஓரள்வுக்கு தெரிந்துகொண்டுள்ளோம். இதுவரை பார்த்ததில் இருந்து பாலஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் இரண்டிலுமே மேன்மையும், குறைபாடுகளும் உள்ளன.
எனவே விஞ்ஞானிகள் க்ரூஸ் மிசைலில் இல்லாமல் பாலஸ்டிக் மிசைலில் உள்ள நற்குணங்கள், பாலஸ்டிக் மிசைலில் இல்லாத க்ரூஸ் மிசைலில் உள்ள நற்குணங்கள், என்று இரண்டு வகை ஏவுகணைகளின் நற்குணங்களையும்ம் ஒருங்கிணைத்து ஒரு ஏவுகணையை உண்டாக்கினால், அது இதுவரை உள்ல ஏவுகணைகளைவிட சக்தி மிகுந்த ஆயுதமாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள்.
அப்படித்தான் இந்த ஹைப்பர் சோனிக் மிசைல் என்ற ஒரு கருத்து உருவானது.
பாலஸ்டிக் ஏவுகணையில் உள்ள அதிக வேகம், அதேபோல க்ரூஸ் ஏவுகணையில் உள்ள பாதையை மாற்றக் கூடிய திறன் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும்போது அது ஹைப்பர்சோனிக் மிசைலாக உருவெடுக்கிறது.
ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இரண்டு விதங்களில் உருவாக்க முடியும்.
ஒன்று தற்போதுள்ள க்ரூஸ் மிசைல்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் அதனை ஒரு ஹைப்பர்சோனிக் மிசைலாக உருவாக்கலாம். காரணம் பயணிக்கும் திசையில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் ஏற்கனவே க்ரூஸ் மிசைலில் உள்ளது.
அப்படி வேகத்தை அதிகரிக்க வேண்டுமானால் அதன் என்ஜினை மாற்ற வேண்டும். அவற்றில் ஒரு க்ரூஸ் மிசைலாக பயன்படுத்தப்படும் ஜெட் என்ஜிங்களுக்குப் பதிலாக ஸ்க்ராம்ஜெட் (Scramjet) என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள எஞ்ஜின்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் வேகத்தை அதிகரிக்க முடியும்..
ஆனால் தற்போதுவரை அந்த ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பத்தில் உலகில் எந்த ஒரு நாடும் முழுமை பெறவில்லை என்பதுதான் உண்மை. எனவே ஹைப்பர்சோனிக் க்ரூஸ் மிசைல்கள் என்ற அடிப்படையிலான ஏவுகணைகள் உடனடியாக உருவாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகும்.
அடுத்த வகை, இதேபோல பாலஸ்டிக் ஏவுகணைகளில் அவற்றின் பாதையை மாற்றும் திறனை உட்படுத்துவதன் மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்குவதாகும். அப்படி உருவாக்கப்படும் ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் க்ளைட் வெஹிகிள் (Hypersonic Glide Vehicle) அதாவது HGV என்று குறிப்பிடுவதுண்டு.
இந்த வகை ஏவுகணைகள் ஏற்கனவே உள்ள பாலஸ்டிக் மிசைல்கள் ஏவப்படுவதுபோலவே விண்வெளிக்கு (Outer Space) ஏவப்படும். அதேபோல போர்முனை விடுபடும். ஆனால் இங்கு போர்முனை ஒரு சிறப்பு வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஃப்லையிங்க் வி ஷேப் (Flying V shape) என்று கூறப்படும் இந்த வடிவம் ஒரு முக்கோன வடிவில் இரண்டு சிறிய இறக்கை அமைப்புகளுடன் உருவாக்கப் பட்டிருக்கும். எனவே விண்வெளியில் ஏவுகணையில் இருந்து விடுபடும் இந்த வகை போர்முனை, புவி ஈர்ப்பு விசை காரணமாக தாழ்நோக்கி செல்லும்போது, பாலஸ்டிக் ஏவுகணைகளில் உள்ள போர்முனைபோல நேராக பூமியை நோக்கி வீழாமல் சற்று சறுக்கிக் கொண்டு பறக்கும்.
நாம் காகித ராக்கட் விடும்போது அது நேரடியாக வீழாமல் சறுக்கிக் கொண்டு பறந்து சென்று வீழ்வதைப் பார்த்துள்ளோம். அதே அடிப்படைதான் இந்த HGV யிலும் பயன்படுத்தப் படுகிறது. அப்படி அது நேரடியாக வீழாமல் சறுக்கிக் கொண்டு பறக்கும்போது அதன் பாதையை க்ரூஸ் மிசைலில் செய்வதுபோல மாற்ற முடியும். இதுதான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்று அழைக்கப் படுகிறது.
விண்வெளியில் இருந்து புவிஈர்ப்பு விசை காரணமாக கீழ்நோக்கி வருவதால் அதிக வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கும். அதிக வேகம் என்னும்போது மேக் 5 அதற்கு மேல் என்று கூறலாம். சாதாரண க்ரூஸ் மிசைல்களைவிட அதிக வேகம் உண்டாகும். அதோடு அது பயணிக்கும் பாதையை மாற்ற முடியும்.
எனவே இவை மிகவும் அபாயகரமானவையாக இருக்கும். அதிக வேகமிருப்பதால் இவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பயணிக்கும் பாதையை மாற்ற முடியும் என்பதால், பாலஸ்டிக் மிசைலில் உள்ளதுபோல இதன் இலக்கை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அதிக வேகத்தில் செல்வதால் அதனை தடுப்பது மிக கடினமான விசயமாகும்.
உலகில் எந்த ஒரு நாட்டிடமும், ஹைப்பர்சோனிக் கிளைட் வெஹிகிளை தடுக்கும் தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்குவதும், சோதனைகள் நடத்துவதும் எல்லாம் பெரும் செய்திகளாக மாறியுள்ளன.
இதுவரை ஹைப்பர்சோனிக் ஏவுகணை வைத்துள்ள உலகின் ஒரே நாடாக ரஷ்யா உள்ளது. ஆனால் சீனா டி.எஃப் – 17 என்னும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வைத்துள்ளதாக கூறுகிறது. உலக சக்தியான அமெரிக்காவினால் இதுவரை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்க முடியவில்லை. அதற்கான ஆய்வுகள் மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் வடகொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன. சீனாவைப் போலத்தான் வடகொரியாவும் கூறக்கூடிய விசயங்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்று கூற முடியாது.
ஏவுகணைகள் என்றால் என்ன, பாலஸ்டிக் மற்றும் க்ரூஸ் மிசைல்கள் என்றால் என்ன, இரண்டையும் ஒருங்கிணைத்துள்ள ஹைப்பர்சோனிக் மிசைல் என்றால் என்ன என்பதைப் பற்றி இவ்வளவு நேரம் ஓரளவுக்கு தெரியப்படுத்த முடிந்துள்ளது என்று நம்புகிறேன்…
நன்றி..