விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் என்னும் வார்த்தையை பல நேரங்களில் கேட்டிருப்போம். பலரும் பல நேரங்களில் விமான நிலையங்களிலோ அல்லது காணொளிகளிலோ கண்டிருக்க வாய்ப்புள்ளது.
விமானம் பற்றிய தகவல்களை அறிய விரும்பும் எவருமே இது குறித்து அறிந்திருக்க வாய்ப்புள்ளது.
வாட்டர் சல்யூட் பற்றிய சில தகவல்களையும் அது எப்போது வழங்கப்படுகிறது என்பதையும் பற்றி இந்தக் பதிவில் பார்க்கலாம். முழுவதமாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.
என்ன இந்த வாட்டர் சல்யூட்?
விமானம் தரையிறங்கிய பின்னர் விமானம் செல்லும் வழிக்கு இருபுறங்களிலும் தீயணைப்பு வண்டிகளில் இருந்து விமானத்தின் மேல் ஒரு தோரணவாயில் போல தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பது வாட்டர் சல்யூட் என்று கூறப்படுகிறது.
முதன்முதலில் இந்த நீர் வணக்க முறையை அறிமுகம் செய்தது விமானப் போக்குவரத்துத் துறையல்ல. ஆரம்ப காலத்தில் கப்பல்துறையில் நடைமுறையில் இருந்ததாகும் இந்த வாட்டர் சல்யூட் முறை.
வாட்டர் சல்யூட் நடைமுறையின் தொடக்கம்
1. ஏதேனும் கப்பல் புதியதாக கடல் பயணத்தை தொடங்கும்போது.
கப்பல் புதிதாக கட்டப்பட்டு துறைமுகத்தில் இருந்து அதன் முதலாவது கடல் பயணத்தைத் தொடங்கும்போது, மகிழ்ச்சியின் அடையாளமாக, வரவேற்பின் அடையாளமாக நீர் வணக்கம் செலுத்தப்படுகிறது.
2. பராமரிப்புப் பணிகளுக்குப் பின்னர் மீண்டும் கடல் பயணத்தைத் தொடங்கும்போது.
கப்பல்கள் பராமரிப்புப் பணிகளுக்காக துறைமுகங்களில் நிறுத்தப்பட்டால் அது நிறைவடைய சில மாதங்களோ அல்லது பல மாதங்களோ கூட கால அவகாசம் எடுக்கலாம்.
அவ்வாறு பராமரிப்புப் பணிகளுக்காக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் பணிகல் முடிவடைந்து, மீண்டும் கடல் பயணத்தைத் தொடங்கும்போது நீர் வணக்கம் செலுத்தப்படுவதுண்டு.
3. புதிய இடத்திற்கு செல்லும்போது.
ஏற்கனவே சேவையில் இருக்கும் கப்பலாக இருந்தாலும், ஒரு புதிய வழித்தடத்தில் அதன் முதல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், துறைமுகத்தை அடையும்போது இந்த மரியாதை செலுத்தப்படும்.
4. புதிய வழித்தடத்தில் முதல்முறை பயணப்படும்போது.
என்று இப்படி பல்வேறு நேரங்களில் அந்தக் கப்பல்களை வாழ்த்தி அனுப்பும் விதமாக இரண்டு படகுகள் கப்பல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோரணவாயில் போல தண்ணீர் பீய்ச்சி அடித்து அனுப்பி வைக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.
விமானம் எதனால் அதிக உயரத்தில் பறக்கிறது?
விமானத்துறையில் வாட்டர் சல்யூட்
அதுவரை கப்பல்துறையில் பழக்கத்தில் இருந்துவந்த இந்த முறை விமானத்துறைக்கு முதன் முதலில் 1990 ல் தான் அறிமுகமானது.
டெல்டா ஏர்லைன்சின் ஒரு கேப்டன் ஓய்வு பெறுவதற்கு முன் தன்னுடைய கடைசி விமானப் பறத்தலை சால்ட் லேக் சர்வதேச விமான நிலையத்திற்கு மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவரது விமானம் தரையிறங்கியதும் சால்ட்லேக் விமானநிலையத்தில் அவரைக் கௌரவிக்கும் விதமாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் சார்பாக முதன் முதலில் வாட்டர் சல்யூட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பின்னர் பல்வேறு சூழ்நிலைகளில் அது நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு சூழ்நிலைகள் என்னும்போது இங்கு கூறியுள்ளதுபோல கேப்டன்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர் கடைசியாக செலுத்தும் விமானம் தரையிறங்கும் நேரத்தில் வாட்டர் சல்யூட் ஏற்பாடு செய்யப்படும்.
அதேபோல விமான நிலையங்களில் உள்ள ஏ.டி.சி யில் பணிபுரியும் ஏதேனும் ஏர் ட்ராஃபிக் கண்றோலர் பணி ஓய்வு பெறும் நேரத்தில் அவர் வழிநடத்தக் கூடிய கடைசி விமானம் தரையிறங்கும் நேரத்தில் அவரைக் கௌரவிக்கும் விதமாக நீர் வணக்கம் கொடுக்கப்படும்.
புதிய விமான நிலையம் கட்டப்பட்டு அதன் செயல்பாடுகள் தொடங்கும்போது அந்த விமான நிலையத்தில் முதன் முதலில் தரையிறங்கும் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் கொடுக்கப்படும்.
ஏற்கனவே உள்ள விமானநிலையத்தின் புதிய முனையத்தில் முதன் முதலில் தரையிறங்கும் விமானதிற்கு ‘water salute‘ மரியாதை செலுத்தப்படும்.
புதிதாக அமைக்கப்பட்ட ஓடுபாதையில் முதன்முதலில் தரையிறங்கும் விமானத்திற்கு இந்த மரியாதை வழங்கப்படும்.
அதேபோல புதிதாக தொடங்கப்பட்ட விமான நிறுவனத்தின் விமானம் முதன் முதலில் தரையிறங்கும்போது, குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு புதிதாக சேவையைத் தொடங்கியுள்ள விமானம் தரையிறங்கும்போது எல்லாம் நீர் வணக்கம் செலுத்தப்படும்.
நிர்வாக மற்றும் தொழில்நுட்ப முன்னேற்பாடுகள்
இந்த நடைமுறைக்கு விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகணங்கள் பயண்படுத்தப்படும்.
விமானநிலையத்திலுள்ள தீயணைப்புத் துறையும், ஏ.டி.சி யும் விமான நிலைய நிர்வாகமும் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதாகும் இந்த நடைமுறை.
வெளிப்பார்வைக்கு ஏதோ இரண்டு வாகணங்கள் விமானத்தின் மேல் தண்ணீர் அடிப்பதுபோல தோன்றினாலும், அதற்குப் பின்னால் நிறைய நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகள் உள்ளன.
முதலில் ஏர் ட்ராஃபிக் கண்ரோல் மையத்தில் இருந்து தீயணைப்புத் துறைக்கு விமானம் பற்றிய தகவல் கொடுக்கப்படும்.
அதில் விமானம் தரையிறங்கும் ஓடுபாதை, தரையிறங்கியபின்னர் விமானம் பயணிக்கக் கூடிய டாக்ஸி வே, விமானம் தரையிறங்கும் சரியான நேரம், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தமுடிந்த இடம் என்று இன்னும் ஏராளமான தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
அவ்வளவும் செய்து வாகனங்கள் தயார் நிலையில் நிற்கும்போதும் கூட தண்ணீர் எப்போது அடிக்க வேண்டும் என்பது ஏ.டி.சி தான் முடிவு செய்து தெரிவிக்கும். காரணம் ஏ.டி.சி விமானத்தின் கேப்டனுடன் தொடர்பில் கலந்துபேசி முடிவெடுக்கும் என்பதுதான்.
அதேபோல இவ்வளவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு water salute தொடங்கப்போவதற்கு முன்பாக விமானத்தின் கேப்டன், விமானத்திற்கு வாட்டர் சல்யூட் கொடுக்கப்படுவதையும் என்ன காரணத்திற்காக கொடுக்கப்படுகிறது என்பதையும் பற்றி அறிவிப்பார்.
விமானம் தரையிறங்கிய உடன் இருபுறத்திலும் தீயணைப்பு வாகனங்கள் நின்றுகொண்டு விமானத்தில் தண்ணீர் அடிக்கும்போது விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகள் என்னவென்று புரியாமல் பயம் கொள்ளவோ பதற்றமடையவோ வாய்ப்புள்ளது என்பதால் முன்கூட்டியே அது அறிவிக்கப்படும்.
நீர் வணக்கம் செய்யும்போது அவ்வளவு தண்ணீர் வீனாக்கப்படுகிறதே என்று சிலர் சிந்திக்கலாம், அதனாலும் ஒரு பயண் உள்ளது எங்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதாவது விமான நிலையம் மிகவும் முக்கியமான இடம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தில் தீ விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில் அங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும் எந்திரங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்பதால் அதுவும் ஒரு நல்ல விசயம்தான் எங்கிறார்கள்.
உங்களில் யார் இதை நேரில் பார்த்துள்ளீர்கள்?
உங்களில் யாரேனும் பயணித்த விமானத்திற்கு நீர் வணக்கம் கொடுக்கப்பட்ட அனுபவம் உள்ளதா?
அப்படி இருந்தால் அதை தெரியப்படுத்துங்கள்.
Watch Video: விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் ஏன் கொடுக்கப்படுகிறது?