ஐ.நா உட்படவுள்ள சர்வதேச தளங்களில், தீப்பொறி பறக்கும் வாதங்களுக்கும் பிரதி வாதங்களுக்கும் காரணமாகும் ஒரு விசயமாகும், இந்தியா சீனா எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவலும் அத்துமீறிய கட்டுமானங்களும்.
அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில் வெளியிட்ட செய்தியில், கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் சீனா கிராமங்களை அமைத்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன ராணுவத்தின் மேற்பார்வையில் நடக்கும் அதுபோன்ற அத்துமீறல்களை எதனால் இந்தியா ராணுவ ரீதியாக தட்டுக்கவில்லை?
மக்கள் வசிக்க லாயக்கற்ற பகுதிகளில் கிராமங்களை கட்டமைப்பதன் மூலம் சீனாவின் திட்டம் என்ன?
சீனாவின் அந்த நகர்வை எவ்வாறு எதிர்கொள்ளத் தீர்மானித்துள்ளது இந்தியா? என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமது அண்டை நாடுகள் அனைத்துடனும் எல்லைப் பிரச்சினையைக் கொண்டுள்ள ஒரு நாடாகும் சீனா.
தென் சீனக் கடல் பகுதி முதல் இந்தியாவின் லடாக் எல்லைவரை நீண்டுள்ளது சீனா உரிமை கோரும் பகுதிகள்.
இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளில் எல்லாம் தமது உரிமை வாதத்தை சட்டரீதியாக நியாயமானதாக்குவதற்காக பயன்படுத்தும் ஒரு புவிசார் அரசியல் தந்திரம் உள்ளது. அதுதான் சலாமி ஸ்லைசிங்க்.
மத்திய காலக்கட்டம் முதலே ஐரோப்பாவில் நடைமுறையில் உள்ள ஒருவகை இறைச்சி தயாரிப்பாகும் சலாமி என்பது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சௌசேஜ் வடிவில் கேடாகாமல் பாதுகாத்து, தேவையான போது மிகச்சிறிய துண்டுகளாக வெட்டி எடுப்பதைத்தான் சலாமி ஸ்லைசிங்க் என்று சொல்வது.
இந்தியா சீனா எல்லை மற்றும் சீனாவின் தந்திரம்
எல்லை பிரச்சினை நிலவும் பகுதிகளில் சீனா நடத்தும் தந்திரமும் இதுதான்.
எந்த ஒரு பகுதியிலும் சீனா உரிமை வாதத்தை முன்வைத்தால், பின்னர் சிறிது சிறிதாக அந்தப் பகுதியின் பல இடங்களைக் கைப்பற்றும்.
பல ஆண்டுகளாக நடக்கும் ஒரு தந்திரம் என்பதாலும், ஒரு நேரத்தில் மிகக் குறைவான நிலப்பகுதியை மட்டுமே கைப்பற்றுவதாலும், அண்டை நாடுகள் அதைப்பற்றி மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்ளும்.
பல மாதங்கள் அல்லது வருடங்கள் இடைவெளியில் எடுக்கப்படும் செயற்கைக் கோள் படங்கள்தான் சீனாவின் இதுபோன்ற ஊடுருவல்களை வெளிப்படுத்துகின்றன.
அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்ற சீனா கையாள்வது, ஊடுருவும் பகுதிகளில் கிராமங்களை அமைத்துக் கொண்டுள்ள சலாமி ஸ்லைசிங்க் தந்திரமாகும்.
அருணாச்சல் பிரதேஷ் முதல் ஜம்மு கஷ்மிர் வரை நீளும் 3488 கிலோமீட்டர் இந்தியா சீனா எல்லைப் பகுதியிலும் சீனா இத்தகைய தந்திரத்தைக் கையாள்வதுண்டு.
இந்தியாவிற்கு கிடைத்த வரவேற்பு
என்னதான் நல்லவன் வேடமிட்டாலும், எக்காலமும் இந்தியாவை எதிரியாக பார்க்கும் ஒரு நாடுதான் சீனா.
சுதந்திரத்திற்கு பிறகு நேரு தலைமையிலான இந்தியாவிற்கு ஆசிய நாடுகள் கொடுத்திருந்த தலைமைப் பதவிதான் அதற்கான மிக முக்கியமான காரணமாகும்.
பனிப்போர் காலத்தில் நடுநிலையாக இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து அணி சேராக் கொள்கையை உருவாக்குவதில் இந்தியா வெற்றி பெற்றதன் காரனமும் அதுதான்.
ஆசிய நாடுகளிடம் இந்தியாவிற்கு கிடைத்திருந்த அந்த வரவேற்பு சீனாவை பொறாமைப்பட வைத்தது.
தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம்
1959ல் திபெத்தில் இருந்து தப்பிய தலாய்லாமாவிற்கு அரசியல் தஞ்சம் அளித்தது இந்தியா.
அதிலிருந்தே எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது சீனா.
அதாவது 14 வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவிற்கு தஞ்சம் அளித்தது முதல்தான் சீனா எல்லையில் தொடர்ந்து பிரச்சினைகளைச் செய்து வருகிறது.
சீன அதிபர் சௌ என்லாயுடன் செய்து கொண்ட பஞ்சசீல உடன்படிக்கை நடைமுறையில் உள்ள போது, இந்தியா எடுத்த அந்த முடிவு சீனாவை ஆத்திரமடையச் செய்தது.
இந்தியாவின் அந்த முடிவில் அதிருப்தியடைந்த சீனா, எல்லைப் பகுதிகளில் உரிமை வாதங்களை முன்வைத்து பிரச்சினைகளைத் தொடர்ந்தது.
பின்னர் அது 1962ல் நடந்த இந்தியா சீனா போர் முதல், இன்று வரை இந்தியா சீனா எல்லைப் பகுதியில் சீனா நடத்தும் ஊடுருவல்கள் வரைக்கும் வழிவகுத்துள்ளது.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு 2019 – 20 காலக்கட்டத்தில்தான் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவ முயன்றுள்ளது சீனா. அந்த ஊடுருவல் குறித்து தெரிய வந்தது 2021ல்தான்.
2021 ஜனுவரியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், அருணாச்சல் பிரதேச எல்லையில் பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா அத்துமீறி ஒரு கிராமத்தைக் கட்டமைத்துள்ளதாக கூறியிருந்தார்.
பல காலக்கட்டங்களில் இதுபோன்ற பல கிராமங்களை எல்லைப் பகுதிகளில் கட்டமைத்து வருகிறது சீனா. அதோடு எல்லையோரக் கிராமங்களில் அதிகமான மக்களைக் குடியேற்றி, அந்த கிராமங்களின் பரப்பளவை சீனா அதிகரிப்பதாகவும் தகவல்கள் உள்ளன. அந்த கிராமவாசிகளை பார்டர் கார்டியன்ஸ் (Border Guardians )என்று குறிப்பிடுகிறது சீனா.
எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் கண்களும், காதுகளுமாக செயல்படுவதுதான் அவர்களின் முக்கிய தர்மமாக உள்ளது.
செயற்கைக் கோள் படங்களை உட்படுத்திக் கொண்டு நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா, நேப்பாள், பூட்டான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிகளில் சீனா இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை கட்டமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதில் 12 கிராமங்கள் அண்டை நாடுகளுடனான சர்ச்சைக்குரிய பகுதிகளில் அமைந்துள்ளன என்றும், அவற்றுள் ஒரு கிராமம் அருணாச்சல் பிரதேஷ் எல்லைப் பகுதியில் இந்தியா உரிமை கோரும் சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டமைத்துள்ளது என்றும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா சீனா எல்லைப் பகுதியில் ஒவ்வொரு இமாலய மலை இடுக்குப் பகுதிகளிலும், குறைந்த பட்சம் ஒரு கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளது என்றும்,
அங்கெல்லாம் சிறந்த சாலைகள், மின்சார வசதிகள், இணைய வசதிகள், போன்றவை உள்ளன என்றும், அதெல்லாம் போர்க்காலத்தில் சீன ராணுவம் பயன்படுத்த முடிந்த விதத்தில் அந்த நோக்கத்திற்காகவும்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியா சீனா எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் இமாலய பள்ளதாக்குப் பகுதிகளில்தான் அமைந்துள்ளன.
மிக மோசமான, மற்றும் விவசாயம் செய்வதற்கோ, மக்கள் வசிப்பதற்கோ லாயக்கற்ற காலநிலை உள்ள தரிசு நிலமும்தான் அந்தப் பகுதிகள் முழுவதுமுள்ளது.
அதனால் மிகச்சிறந்த அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதோடு, 3000 டாலர் நிதி உதவியும் நல்கித்தான் அந்த கிராமங்களில் மக்களைக் குடியேற வைக்கிறது சீனா.
அதோடு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் செய்கிறது சீன அரசு.
அதோடு எல்லைப் பகுதியில் ரோந்துப் பயணங்களை மேற்கொள்ளத் தயாராக்கும் சீனர்களுக்கு மாதம் 250 டாலர் பணம் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது சீன அரசு.
அவற்றை எல்லாம் சீன ராணுவத்தின் பிராந்திய தளபதிகள்தான் கண்காணிப்பார்கள்.
இந்தியாவோ மற்ற அண்டை நாடுகளோ ஏன் சீனாவின் இந்த நகர்வை ராணுவ ரீதியாக தடுக்கவில்லை என்ற ஒரு சந்தேகம் எழும் இப்போது.
அங்குதான் சீனாவின் உண்மையான தந்திரம் தந்திரமாகவே செயல்படுகிறது என்று சொல்லலாம்.
அதுபோல் கட்டமைக்கும் கிராமங்கள் எல்லாம் பொது மக்களின் கட்டுமானங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
அதனால் அங்கு ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கும் நாட்டை சர்வதேச தளத்தில் குற்றவாளியாகக் காட்சிப்படுத்த முயற்சிக்கும் சீனா.
அவை எல்லாம் பொது மக்களின் கட்டுமானங்கள் என்று அதிகாரப்பூர்வமாக சீனா குறிப்பிடும்போது, அது சர்வதேச தளத்தில் நியாயமானதாகப் பார்க்கப்படும்.
அவ்வாறு சர்வதேச தளத்தில் சீனாவின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்க்கும் நாடுகளை தவறாக சித்தரித்து தனிமைப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் சீனா. அதுதான் அதன் தந்திரம்.
ஆனால் அதைக் கண்டும் காணாததுபோல் விட்டுவிட இந்தியா தயாராக இல்லை. முள்ளை முள்ளால் எடுக்கத் தீர்மானித்துள்ளது இந்தியா. சீனாவின் நரித்தனத்திற்கு அதே பாணியில் ஒரு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது பாரதம். அதற்கான ஆயுதம்தான் இந்தியாவின் வைப்ரண்ட் வில்லேஜஸ் ( Vibrant Villages) திட்டம்.
இந்தியா சீனா எல்லையில் நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2023 ஃபிப்ருவரி 15ல் மத்திய அரசு தொடங்கிய திட்டமாகும் இந்த வைப்ரண்ட் வில்லேஜ் திட்டம்.
இந்தியா சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல் பிரதேஷ், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், உத்தர்காண்ட், லடாக் போன்ற பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
4800 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிட்டிருக்கும் வைப்ரண்ட் வில்லேஜ் திட்டத்தின் மூலம், 628 கிராமங்களை சீனாவுடனான எல்லையை ஒட்டிய பகுதிகளில் கட்டமைக்கிறது பாரதம்.
அவற்றுள் 455 கிராமங்கள் சீனா உரிமை கோரும் அருணாச்சல் பிரதேச எல்லையில் கட்டமைக்கப்படும் என்ற ஒரு சிறப்பையும் கொண்டுள்ளது இந்தத் திட்டம்.
மேம்பட்ட சாலைகள், மின்சாரம், மருத்துவமணைகள், பள்ளிகள் உட்பட ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.
அதோடு அந்த கிராமவாசிகளின் வாழ்வாதாரத்திற்காக நவீன விவசாய முறைகள், சுற்றுலாத்துறையின் மேம்பாடு, முதலீடுகளை ஊக்குவித்தல், சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், போன்றவையும் இந்த திட்டத்தின் பாகமாக செயல்படுத்தப்படும்.
வைப்ரன் வில்லேஜ் திட்டத்தின் படி அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா சீனா எல்லை நெடுகிலும் 2963 கிராமங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது இந்தியா.
எதிர்காலத்தில் சீனாவின் ஊடுருவலைத் தடுக்கவும், சர்வதேச தளத்தில் இந்திய வாதத்திற்கு வலுச்சேர்க்கவும் இந்த நகர்வு உதவிகரமாக இருக்கும்.
இந்த தந்திரத்தை தொடங்கிய சீனாவே கூட ஒருவேளை இந்தியாவின் இத்தகைய நகர்வை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
எல்லையில் ஊடுருவலுக்காக நன்றாக வீட்டுப்பாடம் எல்லாம் படித்து சீனா தயாராக வரும் நிலையில் இந்தியாவின் இந்த திட்டம் பாடத்திட்டத்திலேயே இல்லாத ஒரு கேள்வியாக வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவிற்கு.
சீனாவை ஆத்திரமூட்டாமல் இருப்பதுதான் சிறந்த ராஜதந்திரம் என்று இருந்த காங்கிரஸ் ஆட்சி இதுபோன்ற சீனாவின் நகர்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது, என்பதால் மிக எளிதாக தமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தது சீனா.
ஆனால் இன்றைய இந்தியா எதிலும், எதற்கும், எங்கும் தக்கதான பதிலடிகளைக் கொடுத்து சீனாவை மட்டுமல்ல உலகையே வியக்க வைக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணமாக இந்த திட்டத்தைப் பார்க்கலாம்.
ஜெய்ஹிந்த்!